×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது: 27ம் தேதி சூரசம்ஹாரம்; 28ம் தேதி திருக்கல்யாணம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரசித்திப் பெற்ற கந்தசஷ்டி விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வரும் 27ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா, கந்தசஷ்டி ஆகும். இவ்வாண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.

யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு ஆகியோர் பூஜை நடத்துவதற்கான நிர்வாக அனுமதியை காப்பு கட்டிய சோமஸ்கந்தர் பட்டருக்கு வழங்கினர்.தொடர்ந்து யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாலை திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக்.27ம் தேதி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அக்.28ம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

கடலில் புனித நீராடி விரதம் துவங்கிய பக்தர்கள்
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடியும், சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கள் விரதத்தை துவக்கினர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

கட்டண தரிசனம் ரத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்த திருவிழா காலங்களில் கட்டண தரிசனம் ரத்து என்ற அறிவிப்பின்படி திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நாட்களில் ரூ.100 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி பக்தர்கள் பொது தரிசனம், மூத்த குடிமக்கள் வழி மற்றும் விரைவு தரிசன பாதையிலும் இலவசமாக சுவாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழா நாட்களில் யாகசாலையில் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.3 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழநி மலைக்கோயிலிலும் கோலாகலம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகனின் மூன்றாம் படை வீடான, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழா நேற்று (அக். 23) மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக மூலவருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க மூலவருக்கு காப்புக் கட்டப்பட்டது. பின்னர் சின்னக்குமாரர், வள்ளி – தெய்வானை சமேத சண்முகர், வீரபாகு, நவவீரர்கள், துவார பாலகர், மயில், சேவல், தீப ஸதம்பத்திற்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருக்க துவங்கினர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக். 27ம் தேதியும் நடைபெறும். 28ம் தேதி மலைக்கோயிலில் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் வள்ளி – தெய்வானை சமேத சண்முகர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும்.

இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். கந்த சஷ்டியையொட்டி பழநி கோயில் யானை கஸ்தூரி நேற்று அதிகாலை யானை பாதை மூலமாக மலைக்கோயில் சென்றடைந்தது. அங்கு யானைக்கும் காப்புக் கட்டப்பட்டது.

இதேபோல், முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம், நான்காம் படை வீடான சுவாமிமலை, ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழா நேற்று காலை காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. திருப்பரங்குன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் 27ம் தேதி வரை கோயிலில் தங்கி விரதமிருந்து முருகனை வழிபட உள்ளனர். இந்த கோயில்களிலும் அக்.27ல் சூரசம்ஹாரம், 28ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Tags : Kandhasashti festival ,Tiruchendur Murugan temple ,Soorasamharam ,Thirukalyanam ,Tiruchendur ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...