×

ஷேக் ஹசீனா ஆட்சியில் நடந்த கொலைகள் 15 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை: வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு

டாக்கா:வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில்,காவலில் இருந்த போது காணாமல் போனவர்கள், கொலைகள், சித்ரவதை ஆகியவற்றில் தொடர்புடைய 15 ராணுவ அதிகாரிகளை சிறையில் அடைக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறியதால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து பிரபல பொருளாதார அறிஞர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

கடந்த ஆட்சியின் போது, அரசியல் எதிரிகளை, கடத்துதல், சித்தரவதை செய்தல், ஆட்களை கட்டாயமாக காணாமல் ஆக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 15 ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட, 14 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் 15 பேரை குற்றவியல் தீர்ப்பாயத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை ராணுவ கண்டோமென்ட்டில் உள்ள கிளை சிறைசாலையில் அடைக்கும்படி சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை வழக்கறிஞர் தாஜூல் இஸ்லாம்,‘‘கட்டாயமாக காணாமல் போனவர்கள், கொலைகள் மற்றும் காவலில் இருந்த சித்திரவதைகள் தொடர்பாக ஆஜர்படுத்தப்பட்ட 15 ராணுவ அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பாயம் எந்த ஜாமீன் மனுக்களையும் விசாரிக்கவில்லை, ஜாமீன் மனுக்களுக்கு முறையான நடைமுறை உள்ளது. நவம்பர் 5 ம் தேதி நடக்கும் விசாரணைக்கு முன்னர் முறையான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்’’ என்றார்.

Tags : Bangladesh ,Sheikh Hasina ,Dhaka ,International Criminal Court ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்