×

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 15 அணைகளுக்கு ரெட் அலர்ட்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

* நீர்த்தேக்கங்களை கண்காணிக்க பொறியாளர் நியமனம்
* கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 15 அணைகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 86 சதவீதம் நீர்நிலைகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் மொத்தமாக 87.77 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 224.343 டிஎம்சியில் நேற்றைய நிலவரப்படி 196.897 டிஎம்சி நீர் உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,134 பாசன ஏரிகளில் 1,522 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக 1,842 ஏரிகளில் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாதி அளவில் 2,253 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. 3,370 நீர்தேக்கங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாக மிக குறைந்த அளவில் நீர் இருப்பு உள்ளது.

நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2,040 நீர்தேக்கங்களில் 390 நீர்த்தேக்கங்கள் முழுஅளவை எட்டியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 நீர்த்தேக்கங்களில் 192 நீர்த்தேக்கங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 697 நீர்தேக்கங்களில் 164 நீர்தேக்கங்கள், தஞ்சாவூர் மாவ்டடத்தில் உள்ள 641 நீர்தேக்கங்களில் 157 நீர்தேக்கங்கள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் 1551 ஏரிகளில் நேற்றைய நிலவரம் படி 57 ஏரிகளில் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை, பூண்டி, வீரணம், சோழவரம் ஆகிய ஏரிகளில் மொத்த கொள்ளவான 13.213 டிஎம்சியில் 9.978 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அதாவது 75.52 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 15 அணைகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 87 சதவீதத்திற்கு அதிகமான நீர் இருப்பு உள்ளது. அணைகளில் கடந்தாண்டை விட இந்தாண்டு நீரின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் அனைத்து நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. அணையின் பாதுகாப்பு கருத்தி அவ்வப்போது நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணைகள் மற்றும் ஏரிகள் கண்காணிக்க பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

⦁ சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை
சென்னை குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிக கனமழை பெய்தாலும் வெள்ள நீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலையாற்றில் பாதுகாப்பாக கடலை சென்றடையும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Water Resources Department ,Chennai ,northeast ,Tamil Nadu… ,
× RELATED மேட்டூர் அருகே ஐ.டி. ஊழியர் வெட்டிக் கொலை..!!