சென்னை: பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் கடற்கரை வரை 1 கி.மீ தூரத்திற்கு வெண் நுரை ஒதுங்கியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களில் தண்ணீர் அதிகரித்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் வினாடிக்கு 2,220 கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று மாலையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது அடையாறு கூவம் ஆற்றின் வழியாக கழிவு நீரோடு கடலில் கலக்கிறது. கூவம் ஆற்றில் ஆங்காங்கே பல மாதங்களாக தேங்கிக் கிடந்த கழிவு பொருட்கள், ரசாயன கழிவுகள் செம்பரம்பாக்கம் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரோடு சேர்ந்து கடலில் கலப்பதால் பட்டினப்பாக்கம் கடற்கரையில் வெண் நுரை பொங்கி வருகிறது. மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதிகளில் நுரை படர்ந்து காட்சியளிக்கிறது. கடந்த 6 மாதங்களாக அங்கு தேங்கி கிடந்த கழிவுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதாலேயே இதுபோன்று வெண்நுரை வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த நுரை மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த நுரை பாதிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கூறுகையில், ‘‘இந்த வருஷம் மட்டும் வரவில்லை, மழைக்காலம் வந்தாலே இப்படித்தான் வெண் நுரை வந்து கொண்டிருக்கிறது. கழிவு நீர் கலப்பதால் தான் இப்படி நுரை வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்து தான் வெளியேற்ற வேண்டும். இது போன்ற மழைக்காலங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு தான் கழிவு நீரை வெளியில் விட வேண்டும். இந்த கழிவு நீர் கடலில் கலக்கும் போது ஒரு வாரத்திற்கு மீன்பிடிக்க கடலுக்கு போக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார்கள். ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்றாலும் கழிவு நீர் கடலில் கலப்பதால் 25 நாட்களுக்கு மீன் வளர்ச்சி இருக்காது. எனவே மழைக்காலங்களில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்த பிறகு கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்’’ என்றனர்.
