வந்தவாசி, அக். 23: வந்தவாசியில் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த கூட்டுறவு வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். இவர் தாசில்தார் குடியிருப்பு அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் இளவழகன்(37) திருமணமாகாதவர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்ததால் நெருங்கி பழகி வந்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் இரண்டு முறை இளவழகன் இளம்பெண்ணை அழைத்துச் சென்று மாயமானாராம். அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த இளம்பெண்ணை மீட்டு கணவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனால் இளவழகனிடம் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மாவட்ட நிர்வாகம் இளவழகனை கடந்த மாதம் தற்காலிக பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்ற இளவழகன் தன்னுடன் வரும்படி கையைப்பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் தன்னுடன் வர மறுத்த இளம் பெண்ணையும் அவரது கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து இளம்பெண் வந்தவாசி தெற்கு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து இளவழகனை கைது செய்தார்.
