சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மத்தியிலும், நகரின் முக்கிய சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து மிகவும் சீராக நடைபெற்று வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சிறிய கனமழை பெய்தால் கூட சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இருப்பினும், தற்போதைய கனமழையால் சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. மவுண்ட் ரோடு சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ஜோன் ரோடு சுரங்கப்பாதை உள்ளிட்ட அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து வழக்கமான முறையிலும், மிகவும் சீரான முறையிலும், எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்று வருகிறது.
இந்தச் சீரான போக்குவரத்துக்கு முக்கிய காரணம், சென்னை மாநகராட்சி எடுத்த உடனடி நடவடிக்கைதான். சென்னை மாநகராட்சியானது, சுரங்கப்பாதை அருகிலேயே அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகளை வைத்துள்ளது. இவற்றின் மூலம், சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் கூட அதை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது எந்த சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை.
