சென்னை: கரூரில், செப்டம்பர் 27ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர் சமூக வலைதளத்தில் அவதுறு கருத்துகளை வெளியிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அக்டோபர் 7ம் தேதி கைது செய்யப்பட்ட வரதராஜன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நல பிரச்னைகளை எதிர்கொள்வதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், நீதித்துறை, அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது அவதுறாக கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, வரதராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
