கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்

பந்தலூர், டிச. 29:   பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாரில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேரங்கோடு ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டித்தும், பணிபுரியும் வேலையாட்களை மேற்பார்வையாளர்கள் தகாத வார்த்தைகளில் திட்டுவதை கண்டித்தும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா, நிர்வாகிகள் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் தலைமையில் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: