×

விசைத்தறியாளர்கள் போராட்டம் நிறைவு ஒரு வாரத்திற்கு பின் ரயான் துணி உற்பத்தி துவங்கியது

ஈரோடு, டிச. 29: ரயான் நூல் விலை உயர்வை கண்டித்து, நடந்த விசைத்தறியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நிறைவு பெற்று, நேற்று மாவட்டத்தில் மீண்டும் ரயான் துணி உற்பத்தியை துவக்கினர்.  ஈரோடு வீரப்பன் சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், சூளை போன்ற சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் விசைத்தறி கூடங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ரயான் எனப்படும் செயற்கை நூலின் விலை ஒரே நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. இதனால், விசைத்தறியாளர்கள் அவர்கள் உற்பத்தி செய்த துணிகளை உற்பத்தி செய்த விலைக்கே விற்பனை செய்யும் நிலைக்கும், அதை விட குறைவாக விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், நூல் விலை ஏற்றத்தால் உற்பத்தியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக குற்றச்சாட்டி வந்தனர். இந்நிலையில் நூல் விலையை மாதத்தில் ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்யக்கோரி கடந்த 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் ரயான் துணிகளை மட்டும் உற்பத்தி செய்வதை நிறுத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஒரு வார காலம் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த போராட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்து, நேற்று காலை முதல் மீண்டும் ரயான் துணி உற்பத்தியை மீண்டும் துவக்கி உள்ளனர்.

இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 24லட்சம் ரயான் துணி உற்பத்தி செய்யப்படும். ரயான் நூல் தீபாவளிக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.150க்கு கொள்முதல் செய்து, துணிகளை கொள்முதல் செய்து வந்தோம். இதைத்தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.176 ஆக உயர்ந்தது. நூல் விலை உயர்வை மாதம் ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்யக்கோரி கடந்த 21ம் தேதி முதல் 27ம் தேதி (நேற்று முன்தினம்) வரை ரயான் துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து மாவட்ட கலெக்டரிடமும் நூல் விலை மாதம் ஒரு முறை நிர்ணயம் செய்யக்கோரி மனு அளித்துள்ளோம். எங்களது ஒரு வார கால ரயான் துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 1 கோடியே 75 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வார கால போராட்டத்திற்கு பின், இன்று (நேற்று) முதல் ரயான் துணி உற்பத்தியை துவக்கி உள்ளோம். இந்நிலையில், ரயான் நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.22 உயர்ந்து தற்போது ரூ.194ஆக அதிகரித்துள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும், நூல் விலை உயர்வை மாதம் ஒரு முறை மட்டும் நிர்ணயம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Ryan ,
× RELATED நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின்...