×

பாஜ தலைமை மீது கடும் அதிருப்தி; அண்ணாமலை நற்பணி மன்றத்துக்கு கொடி அறிமுகம்: தனிக்கட்சி தொடங்க திட்டமா?

நெல்லை: தமிழ்நாடு பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை பெயரில் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்ட நற்பணி மன்றத்துக்கு தனி கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பொறுப்பேற்ற நாளில் இருந்தே கட்சிக்குள் கோஷ்டி பூசல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள், புதிய தலைமையை ஏற்காமல் அடிக்கடி அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

நெல்லையில் நடந்த பூத் கமிட்டி மாநாட்டில் கூட ஒன்றிய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அண்ணாமலை பேச்சை தொடங்கியவுடன் பலத்த கரகோஷம் எழுப்பி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அண்ணாமலைக்கு முக்கிய பதவிகள் தராமல் பாஜ தேசிய தலைமை ஒதுக்கி வைத்து உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி உடைந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரிடையாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதனால்கூட்டணி விவகாரம் மற்றும் தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை கூட்டங்களுக்கு அண்ணாமலைக்கு பாஜ தலைமை அழைப்பு விடுப்ப தில்லை. இதற்கிடையே, அண்ணாமலை தனது பெயரில் கோவையில் பல கோடி மதிப்பில் சொத்துக்களை வாங்கி போட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை அவரும் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக பிரதமருக்கு நிர்மலா சீதாராமன் ரகசிய புகார் அளித்திருந்தார். இதனால் பாஜ தேசிய தலைமை மீது அதிருப்தியில் இருந்த அண்ணாமலை அமித்ஷா கூட்டத்தில் கூட பங்கேற்காமல் கோயில் கோயிலாக சுற்றி தியானம் செய்து வந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை பெயரில் சேலம், நெல்லை, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நற்பணி மன்றம், ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. பாஜவில் தலைவர்கள் யார் பெயரிலும் மன்றங்கள் இல்லாத நிலையில் அண்ணாமலை பெயரில் தொடங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்க போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே சமீபத்தில் இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் சென்ற அண்ணாமலை, அங்கு புது கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நெல்லை மாவட்டத்தில் பாஜ ஆன்மிக பிரிவு முன்னாள் தலைவரான வேல் கண்ணன் தற்போது நெல்லையில் அண்ணாமலை பெயரில் நற்பணி மன்றத்தை துவக்கியுள்ளார். நெல்லை மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து அண்ணாமலை நற்பணி மன்றம் (அரசு பதிவு எண் 15/2025) என பதிவையும் செய்து உள்ளார். இதுதொடர்பாக பாளை கேடிசி நகரில் நடந்த விழாவில், மன்றத்தின் கொடியை அண்ணாமலையின் படத்தை போட்டு வெளியிட்டுள்ளார். இந்த விழாவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பெயரில் நற்பணி மன்றம் துவங்க இருப்பதாக பேனர் வைத்த நிலையில், தற்போது அதனை பதிவு செய்து அதன் கொடியை அண்ணாமலை ஆதரவாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர். பாஜ தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவர் பெயரிலான மன்றத்தை பதிவு செய்து, தனிக்கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் அவர் தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்று கூறப்படுகிறது.

பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். அவர் தற்போது நெல்லை தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக உள்ளார். கடந்த மக்களவை தேர்தலிலும் நெல்லை தொகுதியில் பாஜ வேட்பாளராக களம் இறங்கினார். அப்போது நயினார் நாகேந்திரனை ஆதரித்து நெல்லையிலும், அம்பையிலும் நடந்த கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரில் முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளதால் நயினார் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி: அண்ணாமலை பதிவு
அண்ணாமாலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வணக்கம். இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று கூறி உள்ளார்.

Tags : BJP ,Annamalai Charity Foundation ,Nellai ,Annamalai ,Tamil Nadu BJP ,Tamil ,Nadu ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...