×

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். விஜய் மற்றும் த.வெ.க.வினரின் அஜாக்கிரதையாலும், முறையான திட்டமிடல் இல்லாததாலும் கரூரில் நெரிசல் சம்பவம் ஏற்பட்டு உயிர்பலி நேர்ந்துள்ளது.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் பெயரை சேர்க்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்று டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறு உத்தரவிட வேண்டும்.

இந்த விதிகளை மீறிய த.வெ.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் த.வெ.க.வினர் மீது சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு குறைந்தது தலா ஒரு கோடி இழப்பீடு வழங்க த.வெ.க. தலைவர் விஜய்க்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையவை. சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளது. உச்ச நீதின்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வில் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Vijay ,Tamil Nadu Victory Party ,Election Commission ,Court ,Chennai ,Madurai, Selvakumar ,Karur ,Vijay… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்