சென்னை: எல்ஐசி நிறுவனம் ஜன் சுரக்ஷா, பீமா லட்சுமி என்ற 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து எல்ஐசி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்ஐசியின் ஜன் சுரக்ஷா, பீமா லட்சுமி என்ற திட்டங்களை எல்ஐசி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.துரைசாமி அறிமுகம் செய்தார். இந்த திட்டங்கள், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியின் கீழ் எல்ஐசி அறிமுகப்படுத்திய முதல் 2 திட்டங்கள் ஆகும். வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருக்கும் தற்போதைய சூழலில், இந்த திட்டங்கள் பாலிசி காலம் முழுவதும் உத்தரவாதமான கூடுதல் தொகைகளை வழங்குகின்றன. இரண்டு திட்டங்களின் கீழும் 3 முழு ஆண்டு பிரீமியங்களைச் செலுத்திய பிறகு ஆட்டோ கவர் வசதி கிடைக்கிறது.
ஜன் சுரக்ஷா – திட்டம் (திட்டம் 880): இது ஆயுள் நுண் காப்பீட்டுத் திட்டமாகும். குறைந்த வருமானம் கொண்ட மக்களின் சேமிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உத்தரவாதமான கூடுதல் தொகைகள் பாலிசி காலம் முழுவதும் ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் வருடாந்திர பிரீமியத்தில் 4% என்ற விகிதத்தில் சேர்க்கப்படும். பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்தால் குடும்பத்திற்கு நிதி உதவியையும், பாலிசிதாரருக்கு முதிர்வு நேரத்தில் மொத்தத் தொகையையும் இந்தத் திட்டம் வழங்குகிறது. 18 வயது முதல் 55 வயது வரை இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 1,00,000. அதிகபட்சம் ரூ. 2,00,000.
பீமா லட்சுமி திட்டம் (திட்டம் 881): இது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம்.
இதில், அவர்களுக்கான ஆயுள் காப்பீடு, மற்றும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, அல்லது பிரீமியம் செலுத்துதல் நிறுத்தப்பட்ட பிறகோ, ஆயுள் காப்பீட்டாளரின் விருப்பப்படி வாழ்வுக்காலப்பயன்கள் வழங்கப்படும். மேலும், வரையறுக்கப்பட்ட நோய் காப்பீடு மற்றும் உத்தரவாத முதிர்வு சலுகைகள் வழங்கப்படும். நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மொத்த அட்டவணை ஆண்டு பிரீமியத்தில் 7% என்ற விகிதத்தில் உத்தரவாதமான கூடுதல் தொகைகள் சேர்க்கப்படும். 18 வயது முதல் 50 வயது வரை இதில் சேரலாம். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 2,00,000. அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு வரம்பு இல்லை. மேற்கண்ட 2 திட்டங்களும் லாபப்பங்களிப்பற்ற, பங்கு சந்தை சாராத, தனிநபர் சேமிப்பு, காப்பீட்டுத் திட்டங்களாகும். இவ்வாறு எல்ஐசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
