- குஜராத்
- ஹர்ஷ் சங்கவி
- முதல் அமைச்சர்
- ஜடேஜா
- காந்திநகர்
- பாஜக
- பூபேந்திர படேல்
- மகாத்மா மந்திர்
- காந்திநகர்…
காந்திநகர்: குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்களும் நேற்று முன்தினம் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடந்த விழாவில், புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இதில்,உள்துறை மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த ஹர்ஷ் சங்கவி துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முக்கியத் தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜாம்நகர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா அமைச்சராகியுள்ளார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் புபேந்திர படேல் தனது அமைச்சரவையில் 19 புதிய எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த 6 பேர் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்திருந்தாலும், சங்கவி உள்ளிட்ட 6 பேரின் ராஜினாமாவை முதல்வர் ஏற்கவில்லை. அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின் மொத்த பலமானது முதல்வர் உட்பட 26 ஆக உயர்ந்துள்ளது.
