×

பழைய அடிமைகள் பத்தவில்லை என்று புதிய அடிமைகளை பாஜ வலைவீசி தேடுகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: பழைய அடிமைகள் பத்தவில்லை என்று புதிய அடிமைகளை பாஜ வலைவீசி தேடுகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி திருநாள் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது: ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் ஒன்றிய பாஜவிற்கு அடகு வைத்தவர்கள் தான் இந்த அடிமை கூட்டம். மீண்டும் அதிமுக – பாஜ கூட்டணி வைத்துள்ளனர். சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இனிமேல் எந்த காலத்திலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது, தோல்விக்கு முக்கிய காரணமே பாஜவுடன் கூட்டணி வைத்தது தான் என்று கூறினார்கள். இனிமேல் எந்த காலத்திலும் பாஜவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி நான்கு கார்கள் மாறி திருட்டுத்தனமாக டெல்லிக்குச் சென்று கூட்டணி வைத்துவிட்டு வந்திருக்கிறார்.

இப்படி ஒரு அடிமை கூட்டத்தை பாஜ தயார்படுத்தி வைத்துள்ளது. பாஜவுக்கு பழைய அடிமைகள் பத்தவில்லை என்று புதிய அடிமைகளை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக புதிய அடிமைகள் விரைவில் ஒன்றிய பாஜ அரசிடம் மாட்டுவார்கள். எத்தனை அடிமைகள் வந்தாலும் அவர்களை தமிழ்நாட்டில் கால் வைக்க திமுக தொண்டன் அனுமதிக்கமாட்டான். அதற்கு இன்றைய நாளில் நாம் அத்தனை பேரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். 200 மட்டுமல்ல 200க்கும் அதிகமான தொகுதிகளில் ஜெயித்து காட்ட வேண்டும். மீண்டும் அடிமை ஆட்சியை தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்கும் கடமை மக்களுக்கு மட்டுமல்ல, திமுக தொண்டணுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு மறுசீரமைப்பு பகுதியில் குடியிருந்த 1081 குடும்பங்களுக்கு பரிசு பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Tags : BJP ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Diwali ,DMK ,Broadway.… ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...