×

வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.. எத்தனை புயல் உருவாகும் என இப்போது சொல்ல முடியாது: வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா!!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தென்மேற்கு பருவமழை விலகி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, கடலோர ஆந்திராவிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும். நடப்பாண்டில் இயல்பைவிட கூடுதலாக 50 செ.மீ. மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் மிக கனமழை பெய்துள்ளது. காயல்பட்டினம், திருச்செந்தூரில் தலா 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆற்காடு, தூத்துக்குடி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. சாத்தான்குளம் 8 செ.மீ., நம்பியார் அணை, நாங்குனேரியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. 16 நாள்களுக்கான மழை அளவு இயல்பை விட 37% அதிகமாக பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் அக்டோபர் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள் பகுதிகளில் அக்.18 வாக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Meteorological Center ,Southern ,Chennai ,Chennai Meteorological Center ,Tamil Nadu ,Southern Zone ,Amutha ,Tamil Nadu.… ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...