×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் ‘தென் இந்தியாவில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியது. அடுத்த 2 நாட்களில் தென் மேற்கு பருவமழை இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து முழுமையாக விலகும்’ எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 4 நாட்கள் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள -கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,India Meteorological Department ,South India ,Odisha ,Chhattisgarh ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு