×

பழநியில் சீசன் எதிரொலிகுற்றங்களை தடுக்க 45 போலீசார் ரோந்துகேமராக்களும் கண்காணிக்குது

பழநி, டிச.28: ஐயப்ப பக்தர்கள் சீசனின் காரணமாக பழநி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க 45 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகளும் அதிகளவு பழநி நகரில் சுற்றி திரிந்து வருகின்றனர். பொதுமக்கள், பக்தர்களின் பயம் போக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழநி நகர், புறநகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, பழநி நகர், புறநகரில் 3 பீட்கள் ஏற்படுத்தப்பட்டு 40க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி அடிப்படையில் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பைக், வேன், ஜீப் போன்ற வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர, சரக எல்லைகளில் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. சீருடை போலீசார் மட்டுமின்றி மப்டி போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிரிவீதி முழுவதும் காண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வீட்டை பூட்டி விட்டு 2 நாட்களுக்கு மேல் வெளியூர்களில் தங்க செல்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினர்.

Tags : season ,Palani ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு