×

உத்தரபிரதேச கிராமங்களில் ஓநாய் கடித்து 6 பேர் பலி: கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவு

பஹ்ரைச்: உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் தாக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், மக்களை அச்சுறுத்தி வரும் அந்த விலங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓநாய்க் கூட்டம் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததோடு, 18 பேர் படுகாயமடைந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஓநாய்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் தற்போது வரை நான்கு குழந்தைகள் மற்றும் முதிய தம்பதி உட்பட ஆறு பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்றுள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, வனத்துறையினரும், உள்ளூர் நிர்வாகத்தினரும் ஓநாய்களைப் பிடிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி இளைஞர் ஒருவரைத் தாக்க முயன்ற ஓநாயை, வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினர்.

இதுவரை, ஒரு ஓநாய் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. மற்றொரு ஓநாய் காலில் சுடப்பட்ட நிலையில், அதுவும் இறந்திருக்கலாம் அல்லது நகர முடியாத நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. காணாமல் போன மூன்றாவது ஓநாயைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மனித ஆக்கிரமிப்புகளால் வாழ்விடங்களை இழந்த ஓநாய்கள், உணவு தேடி மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதே இதுபோன்ற மனித-வனவிலங்கு மோதல்களுக்கு காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Tags : Uttar Pradesh ,Bahraich ,Bahraich District, Uttar Pradesh ,
× RELATED போராட்டம் காரணமாக மூடப்பட்ட டாக்கா...