×

புதுச்சேரி-கடலூர் பூண்டியாங்குப்பம் இடையே ரூ.1588 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி எம்என்குப்பம் முதல் கடலூர் பூண்டியாங்குப்பம் வரை ரூ.1588 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகில் இருந்து நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்த சாலை விழுப்புரத்தில் தொடங்கி புதுச்சேரியின் எல்லைப்பகுதியை தொட்டபடி பயணித்து கடலூர், சிதம்பரம், சீர்காழி வழியாக நாகப்பட்டினத்தை அடையலாம். இடையே ரயில்வே கேட் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி எல்லைப்பகுதியில் இருந்து கடலூர் பூண்டியாங்குப்பம் நான்குவழிச்சாலை ரூ.1588 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை புதுச்சேரி ராஜீவ்காந்தி சதுக்கம் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட மைதானத்தில் இன்று காலை நடந்த அரசு விழாவில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் முதல் தட்டாஞ்சாவடி ராஜீவ்காந்தி சதுக்கம் வரை சுமார் 4 கிலோ தொலைவுக்கு ரூ.436.18 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணியையும், ரூ.25 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணியையும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

Tags : Puducherry-Cudalur Poondiankuppam ,Puducherry ,Union Minister ,Nitin Gadkari ,Puducherry MNKuppam ,Cuddalore Poondiankuppam ,Villupuram ,Janakipuram ,Chennai-Trichy National Highway ,Nagapattinam… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்