×

விலை உயர்வால் கொப்பரை வரத்து அதிகரிப்பு

ஈரோடு,டிச.28:   புதிய  தேங்காய் வரத்து குறைந்ததையடுத்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருப்பில்  வைக்கப்பட்டிருந்த கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேங்காய் மற்றும் கொப்பரை விலை கடந்த  சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆனால் ஈரியோபைட்,  குருத்தழுகல், இலைக்கருகல் உள்ளிட்ட நோய்களின் தாக்கத்தால், விளைச்சல்  வழக்கத்தை விட குறைந்து வருகிறது.

தமிழகத்தில் பிப்ரவரி முதல் செப்டம்பர்  வரை தேங்காய், கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து, விலை குறையும்.  அதன்பின் இருப்பில் உள்ள கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வருவது  வழக்கம். தற்போது விற்பனைக்கு வரும் தேங்காய் வரத்து மிகவும் குறைவாகவே  உள்ளது. இதனால் இருப்பு வைத்திருந்த பழைய கொப்பரை மார்க்கெட்டுகளுக்கு  விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளதாக, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொப்பரை  இருப்பு வைத்துள்ள விவசாயிகளிடம் காங்கயம், வெள்ளகோவில், கேரள  வியாபாரிகள், எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக கொப்பரையை வாங்கி செல்கின்றனர்.  செப்டம்பர் மாதம் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.95 முதல் ரூ.110 இருந்தது.  தற்போது ரூ.135 வரை விற்பனையாகிறது. இதனால் பெருந்துறை சொசைட்டி,  அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு அதிக அளவில் பழைய இருப்பு  கொப்பரைகள் வரத்து அதிகரித்துள்ளது. பிப்ரவரி வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...