×

கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க கடற்படை அதிரடி ஹெலிகாப்டரில் நடுக்கடலுக்கு சென்று படகுகளில் சோதனை

ராமேஸ்வரம்: ஆழ்கடல் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க, இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று நடுக்கடலில் படகுகளை சோதனை செய்தனர். ராமேஸ்வரம் தீவு மற்றும் பாம்பன் அதை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடத்தல்காரர்கள் மீனவர்கள் போர்வையில் மீன்பிடி படகுகளை கடத்தலுக்கு பயன்படுத்தி, பல்வேறு வகையான பொருட்களை கடத்தி சென்று இந்திய கடல் எல்லையில் கடத்தல் பரிமாற்றம் செய்கின்றனர். இந்த நடவடிக்கைகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதால் மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளது. ஐஎன்எஸ் பருந்து இந்திய கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் கடல் பகுதியில் ரோந்து மேற்கொண்டுள்ளனர்.

கடற்படையினர் தீவுப்பகுதிகள், ஆழ்கடல் மற்றும் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹெலிகாப்டரில் ரோந்து வரும் கடற்படையினர் ஆழ்கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிற்கும் படகுகளின் மேலே தாழ்வாக பறந்து படகுகளை சோதனையிட்டு பதிவு எண் இல்லாத படகுகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். பாம்பன் குந்துகால் மன்னார் வளைகுடா குருசடை தீவு அருகே 3 பேருடன் கடலில் நின்ற படகு ஒன்றை இதுபோல் கடற்படையினர் சோதனை செய்தனர். அப்போது, படகில் மூடிக்கிடந்த தார்ப்பாய்களை அகற்ற சொல்லி உள்ளே கடத்தல் பொருள் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்தனர். இதேபோல் கடலில் கடத்தல் நடவடிக்கையை தடுக்க இந்திய கடற்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Mediterranean ,Rameshwaram ,Indian Navy ,Sri Lanka ,Gulf of Rameshwaram Island ,Pamban Sea ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்