×

ராமநாதபுரம் எம்பி தொகுதியில் நவாஸ்கனி வெற்றியை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ் நேரில் ஆஜர்: உயர் நீதிமன்றத்தில் 39 ஆவணங்கள் தாக்கல்

 

சென்னை: ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 39 ஆவணங்களை தாக்கல் செய்தார்.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், வேட்புமனுக்களில் உண்மை தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜரானார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் இளம்பாரதி, ராஜலட்சுமி பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி வழக்கு தொடர்பான 39 சாட்சி ஆவணங்களை தாக்கல் செய்னர். இவற்றில் 3 ஆவணங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அப்போது நவாஸ்கனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாஸ்கர், ஓபிஎஸ் தாக்கல் செய்த சில ஆவணங்கள் குறைபாடுகளுடன் உள்ளன. அவை முழுமையாக இல்லை என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, குறைபாடுகளை சரி செய்து முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Tags : OPS ,Navaskani ,Ramanathapuram ,Chennai ,O. Panneerselvam ,Lok Sabha elections ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்