×

பீச் வாலிபாலில் சென்னை வெற்றி

நாகப்பட்டினம், அக். 9: நாகப்பட்டினத்தில் நடந்த மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பீச் வாலிபால் போட்டியில் கல்லூரி பிரிவில் செங்கல்பட்டு அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் நடந்து வந்தது. இப்போட்டியில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என 38 மாவட்டங்களைச் சேர்ந்த 100 அணிகள் பங்கேற்றது. நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி சுற்றில் கல்லூரி பிரிவில் சென்னை அணியுடன், செங்கல்பட்டு ஆண்கள் கல்லூரி அணி மோதியது. இதில் இரண்டு நேர் செட்டில் 21-16, 21-18 என்ற புள்ளிகளை பெற்று சென்னை அணியை வீழ்த்தி, செங்கல்பட்டு கல்லூரி அணி வெற்றி பெற்றது.

அதேபோல் பெண்களுக்கான போட்டியில் செங்கல்பட்டு அணியை வீழ்த்தி, சென்னை கல்லூரி அணி 21-7 21-6 என்ற புள்ளிகளை பெற்று இரண்டு நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. பள்ளிகளுக்கு இடையான பீச் வாலிபால் ஆண்கள் பிரிவில் திருநெல்வேலி அணியை வீழ்த்தி கோவை அணி 21-15, 21-17 என்ற புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. அதேபோல் பெண்களுக்கான போட்டியில் மயிலாடுதுறை அணியை வீழ்த்தி ஈரோடு அணி 21-15, 21-13 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பதக்கங்கள் அணிவித்து முதலமைச்சர் கோப்பை காண பரிசு மற்றும் காசோலை வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு விழாவில் திட்ட அலுவலர் ஸ்ருதி, நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Nagapattinam ,Chengalpattu ,Beach Volleyball ,Chief Minister's Cup ,Tamil Nadu Sports Development Authority ,TSPD ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...