சென்னை: சென்னையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: சுற்றுலாத்துறையில் மாவட்ட வாரியாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் நம் பாரம்பரிய மிக்க, தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற கோயில்கள், புராதன சின்னங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, வால்பாறை போன்ற இயற்கையாக அமையப்பெற்ற மலைவாச சுற்றுலாதலங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் போக்குவரத்து முதற்கொண்டு, விருந்தோம்பல் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலைய துறை செயலாளர் மணிவாசன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் கவிதா, கண்காணிப்பு பொறியாளர், திட்டப் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
