×

சென்னையில் ‘சூப்பர் மூன்’: பொதுமக்கள் கண்டுகளித்தனர்

சென்னை: வானில் அரிய நிகழ்வாக தோன்றும் சூப்பர் மூன் என்ற முழு நிலாவை, பொது மக்கள் நேற்று கண்டுகளித்தனர். இந்த ஆண்டின் முதல் முழு நிலா இது என்பது குறிப்பிடத்தக்கது. வானில் நாம் எப்போதும் பார்க்கும் நிலாவை வழக்கத்தைவிட பெரிதாகவும் மிகவும் அருகிலும் பார்த்தால் எப்படி இருக்கும். அதுதான் சூப்பர் மூன். நிலா அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் போதோ அல்லது அதற்கு மிக அருகில் வரும்போதோ வழக்கத்தை விட பெரிதாக தெரியும். இது பெரிஜி என்னும் சுற்றுப்பாதைப்புள்ளி அல்லது அண்மைப்புள்ளி என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலா வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாகவும், வழக்கத்தைவிட 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.

இதுபோன்ற நிகழ்வு ஒரு வருடத்தில் நிலவின் சுழற்சியை பொறுத்து, 3 அல்லது நான்கு முறை நிகழவும் வாய்ப்புள்ளது. நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் போது சூப்பர் மூனாக தெரியும். அப்போது அதன் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். இதன் ஒளி வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதால் இரவு நேரங்களில் விவசாயப் பெருமக்கள் அறுவடை செய்வதும் உண்டு. அதனால் இதற்கு அறுவடை நிலவு என்று மேற்கு உலகம் அழைக்கிறது. இந்த சூப்பர் மூன் 2025ம் ஆண்டில் அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதிகளில் நாம் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. வானியல் அறிஞர்களின் கணிப்பின்படி, 2025 அக்டோபர் 7ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இந்திய நேரப்படி இந்த நிலவு உச்சத்தை எட்டினாலும், மிகவும் பிரகாசமாகவும் தெரியும்.

இந்த நிலவை டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் உள்பட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் நேற்று காணமுடிந்தது. வானியல் அறிஞர்கள் கருத்துப்படி 2025 அக்டோபர் 6ம் தேதி மாலையில் சூரியன் மறைந்த சில நிமிடங்களில் இந்த சூப்பர் மூன் தெரிய தொடங்கும். அப்போது தங்க நிறம் அல்லது ரத்த நிறத்தில் இது தெரியும். அதன்படி 6ம் தேதி மாலை 6 மணிக்கு வானில் தோன்றிய இந்த சூப்பர் மூன் 7ம் தேதி காலை 5.50 மணி வரையில் நீடித்தது. இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஏற்படும் 3 சூப்பர் மூன்களில் நேற்று தோன்றிய சூப்பர் மூன் முதல் நிகழ்வாகும். இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் நேற்று இரவு மற்றும் காலையில் கண்டுகளித்தனர்.

Tags : Chennai ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...