×

திருமண ஆசை காட்டி நூதன மோசடி; அமெரிக்க மாப்பிள்ளையை நம்பி ரூ.2.3 கோடியை இழந்த ஆசிரியை: கர்நாடகாவில் பயங்கரம்

பெங்களூரு: கர்நாடகாவில் திருமண இணையதளம் மூலம் அறிமுகமான நபரிடம் ஆசிரியை ஒருவர் பல கோடி ரூபாயை இழந்து ஏமாந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 59 வயது விதவை ஆசிரியை ஒருவர், கடந்த 2019ம் ஆண்டு திருமண இணையதளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். அப்போது, அமெரிக்காவில் பொறியாளராகப் பணிபுரிவதாகக் கூறி ‘ஆஹான் குமார்’ என்ற பெயரில் அறிமுகமான நபர், ஆசிரியையிடம் பேசிப் பழகியுள்ளார். நாளடைவில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரைத் தனது மனைவி என்றே அழைத்து வந்துள்ளார்.

அவரை முழுமையாக நம்பிய ஆசிரியை, அந்த நபர் கேட்டபோதெல்லாம் உணவு, திட்டச் செலவுகள், மருத்துவச் சிகிச்சை, அபராதம் எனப் பல்வேறு போலியான காரணங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் சிறுகச் சிறுக மொத்தம் 2.3 கோடி ரூபாயை அனுப்பியுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் அந்த நபர் மீண்டும் பணம் கேட்டபோது ஆசிரியை கொடுக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபர் ஆசிரியையுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை, கடந்த 3ம் தேதி இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோசடி நபரின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற திருமண இணையதள மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறி ஆசைவார்த்தை பேசி மோசடி செய்யும் கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Bangalore ,Bengaluru, Karnataka ,
× RELATED போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல...