×

நெல்லை அருகே பல்வேறு கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள்; கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: நெல்லை அருகே போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்து பயணம் மேற்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லை அருகே மூலைக்கரைபட்டி, பருத்திபாடு, புதுக்குறிச்சி, ரெட்டியார்பட்டி மற்றும் ஆணையப்பபுரம் பகுதிகளில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதிகளில் இருந்து, நெல்லை மற்றும் முக்கிய நகர் பகுதிகளை நோக்கி செல்லும் அரசுப் பேருந்துகள் மிகவும் குறைவாக இயங்குவதால், காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்களில் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் வாசலில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலையும் உருவாகியுள்ளது.

மூலைக்கரைபட்டி வழித்தடத்தில் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், அவையும் அடிக்கடி தாமதமாகவோ அல்லது கூட்டம் நிறைந்திருக்கும் நிலையிலோ வருவதால், மாணவர்கள் நெரிசலில் தள்ளுமுள்ளாக ஏற வேண்டிய சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பல மாணவர்கள் தங்கள் பள்ளியை நேரத்திற்கு அடைய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்ல வசதியாக ஒரு பஸ் மட்டுமே வரும். அதில் இடம் கிடையாது. தினமும் வாசலில் தொங்கியே செல்கிறோம். சில நாட்களில் பள்ளி செல்ல முடியாமலும் போகிறது,’ என்றனர். மேலும், பயணிகள் கூட்டத்தால் ஆணையப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் செல்லும் நிலையும் அந்த பகுதி மக்களை கடும் கோபமடையச் செய்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பஸ்கள் காலை நேரங்களில் நிற்பதில்லை; நின்றாலும் மிக நெரிசல். மாணவர்களும், பெண்களும், முதியோரும் எவ்வாறு ஏறுவது. மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்யும் வகையில் மாவட்ட கலெக்டரும், போக்குவரத்து துறையும் இணைந்து உடனடியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

இல்லையெனில் பெரும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது,’ என்றனர். இதுபோல், பேட்டை, கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம் மேற்கொள்ளும் அவல நிலை உள்ளது. போதிய பேருந்து வசதி இல்லாமை காரணமாக தினமும் திண்டாடும் மாணவர்களின் நிலையை கண்டு பெற்றோர்களும் கவலை அடைந்து வருகின்றனர்.

Tags : Nella ,Mulyakaraipatty ,Paruthipadu ,Puthukurichi ,Retiarpatty ,Anayappuram ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்