×

ரோஜா முத்தையா அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா இந்தி மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.10.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன்,இ.ஆ.ப.,(ஓய்வு) எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை’ (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் இந்தி மொழியின் முன்னணி பதிப்பாளரான வாணி பிரகாஷனும் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள். சிந்து சமவெளி நாகரிகம் விட்ட இடமே தமிழின் சங்கம் தொட்ட இடம் என்பதை இந்த நூலில் ஆர். பாலகிருஷ்ணன் சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் ப‌ணிக‌ள் கழகம் செயல்படுத்தி வரும் திசைதோறும் திராவிடம், இந்த நூல் வெளியீடு வழியாக இந்தி மொழிக்கும் விரிவாகியிருக்கிறது. இதன்மூலம், 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தி மொழியின் முன்னணிப் பதிப்பு நிறுவனமான வாணி பிரகாஷன் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலை சுரபி கத்யால், ஜோதி லாவண்யா ஆகியோர் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மைய முதல்வர் முனைவர் தே.ச. சரவணன், வாணி பிரகாஷன் பதிப்பகத்தின் முதன்மை செயல் அலுவலர் அதிதி மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,R. Balakrishnan ,Roja Muthaiah Foundation ,Chennai ,Roja Muthaiah Research Library Foundation ,School Education Department ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...