ஆலந்தூர் மண்டலத்தில் தூய்மை பணி தனியாரிடம் ஒப்படைப்பு மாநகராட்சி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி தனியாரிடம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆலந்தூர் மண்டல தூய்மை பணியும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஆலந்தூர் மண்டல அலுவலகம் அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மற்றும் பரங்கிமலை உதவி கமிஷனர் ஜீவரத்தினம், இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.

ஆனால், மண்டல அதிகாரி இங்கு வந்து எங்கள் வேலைக்கு உத்தரவாதம் கொடுத்தால்தான் கலைந்து செல்வோம், என அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் சீனிவாசன், தூய்மை பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உங்கள் கோரிக்கையை மனுவாக கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதனையடுத்து, அவர்கள் மனு தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

>