×

கரூர் சம்பவத்தை விசாரிக்க விசாரணை குழு அமைத்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி

 

டெல்லி: கரூர் துயர சம்பவத்தில், சம்பவ இடத்தை பார்வையிட, பாதிக்கப்பட்டோரை சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு அமைத்தது. எம்.பி.க்கள் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, ப்ரஜ் லால், ரேகா ஷர்மா, உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.

கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த நடிகர் விஜய்யின் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் இருவரும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 8 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை அமைத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரில் தவெக கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு, பாஜக தலைவர் நட்டா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் பிராத்தித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவும் எட்டு பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை அவர் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த எம்பிக்கள் குழுவினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து பாஜக தலைமைக்கு அறிக்கை அளிப்பார்கள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், எம்பிக்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிராஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புட்டா மகேஷ் குமார் (தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags : National Democratic Alliance ,Karur ,Delhi ,BJP ,Hema Malini ,Anurag Thakur ,Tejaswi Surya ,Praj Lal ,Rekha… ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...