*ஆலோசனை கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சாலையோர வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். வளர்ந்து வரும் தொழில் மாநகரமான தூத்துக்குடி மாநகரில் சாலையோர வியாபாரிகள் கண்டறியப்பட்டு இதுவரை 6850க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 6300 பேருக்கு தொழில் கடன் இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் தரமான பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்வது குறித்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஒழிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலையோர வியாபாரிகள் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டங்களாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களின் கலந்தாலோசனைக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து பேசுகையில், ‘சாலையோர வியாபாரிகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு தங்களுக்கு மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
வியாபாரிகளின் நலனில் அக்கறை கொண்டு உரிமம் பெறும் வழிமுறைகளை எளிதாக்கி வழங்கி வருகிறோம். மாநகராட்சியானது சாலையோர வியாபாரிகளுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். அதேபோல் சாலையோர வியாபாரிகளும், மாசற்ற பசுமையான மாநகரை உருவாக்க மாநகராட்சி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, ஏஎஸ்பி மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் போக்குவரத்து எஸ்ஐ வெங்கடேஷ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் காந்திமதி, சுகாதார அலுவலர் சரோஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முகஉதவியாளர் ரமேஷ், மாநகர வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபார பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
