×

முள்ளி-கெத்தை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

*வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை அறிவுரை

மேட்டுப்பாளையம் : கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம் வழியாக குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகள் உள்ளன.

இதேபோல் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக கெத்தை, மஞ்சூர் வழியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் செல்லலாம். நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் மூன்றாம் பாதையாக உள்ள இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது.

இதனால் இச்சாலையில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகளின் நடமாட்டம் என்பது சர்வ சாதாரணமாகவே இருக்கும்.

இதனால் இந்த சாலையில் இரவு வேளைகளில் செல்ல வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த சில தினங்களாகவே முள்ளி – கெத்தை சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.

இந்த காட்டு யானைகள் கூட்டம் அவ்வப்போது வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ‘‘வெள்ளியங்காடு சோதனை சாவடியில் இருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதி வரை கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க இரு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே முள்ளி சோதனைச்சாவடியில் இருந்து கெத்தை வழியாக மஞ்சூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் பகல் நேரத்திலேயே இருப்பதால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும்.

தனியாகவோ, கூட்டாகவோ விரட்ட முற்பட கூடாது. அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க கூடாது. சாலையில் வன விலங்குகளை கண்டால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

Tags : Hedge-Ketha road ,GUNNUR ,GOTHAGIRI ,METUPPALAYAM ,GOWA ,NEILAGIRI DISTRICT ,Goa ,Karamada ,Keththa ,Viliyangad, Nilgiri district ,Manchuri ,Kunnur ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...