×

குஜிலியம்பாறை யூனியன் அலுவலக கிணற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி மூடும் பணி சமூகஆர்வலர்கள் எதிர்ப்பு

குஜிலியம்பாறை, டிச. 24 :குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக கிணறு ஒன்று உள்ளது. ஆரம்ப காலத்தில் நீர்வரத்து இருந்த போது இக்கிணறு பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் போதிய மழை இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கடந்த பல ஆண்டுகளாகவே இக்கிணறு நீர்வரத்து இன்றி உள்ளது.

அவ்வப்போது தொடர் மழை பெய்யும் நாட்களில் மழைநீர் சிறிதளவு தேங்கி கிடக்கும். இந்நிலையில் அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு என கட்டப்பட்ட குடியிருப்புகள் மிகவும் சேதமடைந்து இருந்ததால், தற்போது இக்கட்டிடம் இடிக்கும் பணி நடக்கிறது.  இடிக்கப்பட்ட கட்டிட பொருட்களை அங்குள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் கொட்டி வருகின்றனர். மேலும் அதனுடன் பாலீத்தீன் கழிவுகளையும் சேர்த்து கிணற்றினை முற்றிலுமாக மூடி வருவதாக புகார் எழுந்துள்ளது.  

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்றும்,  முற்றிலும் மூடக்கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இங்கு அரசு உத்தரவை மீறும் விதமாக கிணறு மூடப்படுகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளே அதனை மூடும் அவல நிலை உள்ளது. மேலும் கிணற்றில் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்படைகிறது. எனவே குஜிலியம்பாறை ஒன்றிய அதிகாரிகள் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, கிணற்றை மூடாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Community activists ,
× RELATED சென்னையில் 444 மரணங்கள் மறைத்ததை போன்று...