×

முக்கோடி தேவதைகள், ரிஷிகளை அழைத்து திருப்பதியில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக பிரமோற்சவம் துவக்கம்: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

திருமலை: முக்கோடி தேவதைகள், ரிஷிகளை அழைத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடி மற்றும் மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் நான்கு மாடவீதியில் நாதஸ்வர இசைக்கு மத்தியில் கோயில் யானைகள் முன்னால் அணிவகுத்து செல்ல ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலத்தில் பக்தர்கள் கோலாட்டம், பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர். பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலை பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி கோயிலுக்கு கொண்டு சென்று ஏழுமலையானுக்கு சமர்பித்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2026ம் ஆண்டுக்காண காலண்டர் மற்றும் டைரிகளை வெளியிட்டார்.

தொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளான இரவு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய மலையப்ப சுவாமியை முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் வழிபட்டார்.
இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் அக்டோபர் 2ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

* பிரமோற்சவத்தில் இன்று
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 2வது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்திலும் இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கவுள்ளார்.

Tags : Brahmotsavam ,Tirupati ,Malayappa Swamy ,Tirumala ,Tirupati Ezhumalaiyan ,Temple ,Sesha Vahana ,Brahmotsavam of Tirupati ,Ezhumalaiyan Temple ,
× RELATED விவாதம் இன்றி மசோதாக்களை ஒன்றிய அரசு...