×

கோவில் திருமாளம் ஊராட்சியில் கட்டி முடித்து 5 ஆண்டாக பூட்டியே கிடக்கும் ஈமகிரியை மண்டபம்: உடனடியாக திறக்க மக்கள் கோரிக்கை

திருவாரூர், டிச.23: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் கோவில் திருமாளம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகலாக திறக்கப்படாமல் இருந்து வரும் ஈமக்கிரியை மண்டபத்தை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோவில் திருமாளம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள சிதம்பரகுளம் அருகே அரசு நிதி மூலம் கடந்த 2015ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் ஈமகிரியை மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. அப்போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்த அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் பரிந்துரையின் பேரில் இந்த மண்டபம் கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டு காலமாக இந்த ஈமகிரியை மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் இருந்து வருகிறது. மேலும் இந்த கட்டிடத்தை மேற்படி ராஜேந்திரன் பூட்டி வைத்துக் கொண்டு அதற்கான சாவியை தன்னிடம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கட்டிடத்திற்குள் சிமெண்ட் மூட்டை உட்பட பல்வேறு பொருட்களை தனது சொந்த உபயோகத்திற்காக ராஜேந்திரன் போட்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சிதம்பர குளத்தை சுற்றியுள்ள ப.திருமாளம், தலையாரி தெரு, மெயின் ரோடு உட்பட பல்வேறு தெருக்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குடும்பத்தில் இறப்பவர்களுக்கு இறுதி காரியத்தை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஈமகிரியை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Emagiri Hall ,completion ,Kovil Thirumalam ,
× RELATED தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள...