×

மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

புதுடெல்லி: தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரம்பு மீறி மணல் அள்ளி விற்பனை செய்து அதன் மூலம் கோடி கணக்கான ரூபாய் பணம் சட்ட விரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பல்வேறு மணல் குவாரி அதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு (2023) சோதனையிட்டு ,சொத்துக்களை முடக்கி வழக்கு பதிந்தது. மேலும் மணல் குவாரி விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது .

இதை எடுத்து அதனை பரிசீலனை செய்த சென்னை உயர்நீதிமன்றம் சம்மனுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

இதனிடையே சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கனிம வள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மணல் குவாரி அதிபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதம் என்றும் மணல் குவாரிகள் அமலாக்கத்துறையின் விசாரணை வரம்புக்குள் வராது எனகூறி மணல் குவாரி அதிபர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மணல் குவாரிகள் அமலாக்க துறை விசாரணை வரம்புக்குள் வராது என கூறி, மணல் குவாரி உரிமையாளர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதோடு , சொத்துக்கள் முடக்கத்தையும் நீக்கி உத்தரவிட்டது

இந்த இந்த நிலையில் மேற்கண்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தாத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட்டு எந்தவித மறு உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. அதற்கான அவசியம் மற்றும் முகாந்திரம் இந்த வழக்கில் கிடையாது. எனவே மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மற்றும் இடையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து முடித்து வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Tags : Enforcement Directorate ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...