சென்னை: ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதி 153ன்படி 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையில் வள்ளுவர் கோட்டம், கே.கே.நகர் உள்ளிட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
அப்போது தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு துணை பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கள உதவியாளர், வயர்மேன் போன்ற பிரிவுகளில் 36 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு இந்த இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஏஜென்ட்கள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
