×

பூடான் ராணுவம் விற்பனை செய்த வாகனங்களை வாங்கிய விவகாரம் நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை: 20 கார்கள் பறிமுதல்

திருவனந்தபுரம்: பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட கார்களை வாங்கியது தொடர்பான விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான், அமித் சக்காலைக்கல் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. துல்கர் சல்மானின் வீட்டிலிருந்து தமிழ்நாட்டில் மறுபதிவு செய்யப்பட்ட லேண்ட்ரோவர் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பூடான் நாட்டு ராணுவம் தாங்கள் பயன்படுத்திய லேண்ட்க்ரூசர், லேண்ட்ரோவர், டாடா எஸ்யுவி, மகிந்திரா, டாடா டிரக்குகள் உள்பட 190க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட்டது.

இந்த வாகனங்களை வாங்கி ஒரு கும்பல் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்து பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மத்திய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த வாகனங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் மறுபதிவு செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்திற்கு வாங்கும் இந்த வாகனங்கள் 40 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுங்கத்துறை ரகசியமாக விசாரணை நடத்தி வந்தது. இதில் பிரபல மலையாள நடிகர்களான பிரித்விராஜ், துல்கர் சல்மான், அமித் சக்காலைக்கல் மற்றும் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் இதுபோன்ற வாகனங்களை வாங்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று காலை கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் சுங்கத்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்களுடன் இணைந்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.

கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகள், கொச்சியில் மம்மூட்டி தங்கியிருந்த பழைய வீடு மற்றும் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள சில தொழிலதிபர்கள் வீடுகள், வாகன ஷோரூம்கள் உள்பட 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. இதில் துல்கர் சல்மானின் வீட்டிலிருந்து கடந்த 2012ம் ஆண்டு சென்னையில் பதிவு செய்யப்பட்ட TN 01 AS 0155 என்ற பதிவு எண் கொண்ட லேண்ட்ரோவர் கார் உட்பட 2 கார்கள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில் லேண்ட்ரோவர் கார் முதலில் ரஷ்ய தூதரகத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. துல்கர் சல்மான் இந்தக் காரின் மூன்றாவது உரிமையாளர் ஆவார். இதேபோல மலையாள நடிகர் அமித் சக்காலைக்கலின் வீட்டில் இருந்து 2 லேண்ட்க்ரூசர் கார்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.மேலும் திருச்சூர் ,மலப்புரம்,கோழிக்கோடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 17 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கார்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு துல்கர் சல்மானுக்கும், அமித் சக்காலைக்கலுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுங்கத்துறை தீர்மானித்துள்ளது.

* முறையான ஆவணங்கள்
நடிகர் மம்மூட்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள வீட்டில் தான் வசித்து வந்தார். இந்த வீட்டில் இவர் பயன்படுத்திய 10க்கும் மேற்பட்ட கார்கள் இருந்தன. அங்கும் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அந்தக் கார்கள் அனைத்திற்கும் முறையான ஆவணங்கள் இருந்ததால் சோதனை நடத்திய பின்னர் சுங்கத்துறையினர் திரும்பிச் சென்றனர். நடிகர் பிரித்விராஜுக்கு திருவனந்தபுரத்திலும் ஒரு வீடு உள்ளது. அங்கு கார்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பினர்.

* மோசடி செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும்: சுங்கத்துறை ஆணையாளர் பேட்டி
கொச்சி சுங்கத்துறை ஆணையாளர் டிஜு தாமஸ் கூறியது: பூடானில் இருந்து ஏலத்தில் வாகனங்களை வாங்கும் கும்பல் இந்தியாவுக்கு கொண்டு வந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி பதிவு செய்கின்றனர். இந்திய ராணுவம், இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்பட வெளிநாட்டு தூதரகங்களின் போலி சீல்களை பயன்படுத்தி வாகனங்களை பதிவு செய்கின்றனர். இதற்காக பரிவாகன் இணையதளத்திலும் மோசடி செய்துள்ளனர். நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான், அமித் சக்காலைக்கல் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் துல்கர் சல்மானின் 2 கார்கள் உள்பட கேரளாவில் 36 கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் பல கார்களுக்கு இன்சூரன்சோ, சாலை தகுதிச் சான்றிதழோ கிடையாது. இவை எதுவும் இல்லாமல் தான் இவர்கள் கார்களை பயன்படுத்தி வந்துள்ளனர். 2014ல் தயாரிக்கப்பட்ட வாகனம் புதிய வாகனமாக இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூடான் வழியாக கார்களில் இந்தியாவுக்கு போதைப்பொருள் மற்றும் தங்கம் ஆகியவை கடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கேரளாவில் மட்டும் 200 கார்கள் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெரிந்தும் தெரியாமலும் இந்த கார்களை வாங்கியிருக்கலாம். நடிகர்கள் இதுபோன்ற மோசடி கார்களை தெரிந்துதான் வாங்கினார்களா என்பது தெரியவில்லை. நடிகர்கள் துல்கர் சல்மான் உள்பட அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இதை சாதாரணமாக குற்றமாக நினைத்து அபராதம் கட்டி தப்பிவிட முடியாது. கைது நடவடிக்கை வரை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mammootty ,Prithviraj ,Dulquer Salmaan ,Bhutanese army ,Thiruvananthapuram ,Kerala ,Amit Chakkalaikal ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...