வாரணாசி: பெங்களூருவில் இருந்து வாரணாசி சென்ற விமானத்தில், கழிவறை என நினைத்து விமானி அறையைத் திறக்க முயன்ற பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானங்களில் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ.எக்ஸ்-1086-ல் சென்ற பயணி ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கழிவறைக்கு செல்வதாகக் கூறி எழுந்து சென்றுள்ளார்.
அவர் கழிவறை என நினைத்து, விமானியின் அறைக்கதவில் இருந்த குறியீட்டு எண்ணை அழுத்தியுள்ளார். இதனால் விமானி அறையில் அபாய ஒலி எழுப்பியது. உடனடியாக விமானப் பணிப்பெண்கள் விரைந்து சென்று, அந்த பயணியை அவரது இருக்கைக்குத் திரும்ப அழைத்துச் சென்றனர். விமான கடத்தல் முயற்சியாக இருக்கலாம் என அஞ்சிய விமானி, அறைக்கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, வாரணாசி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.
விமானம் தரையிறங்கியதும், அந்த பயணி மற்றும் அவருடன் வந்த 8 பேர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘அந்த பயணி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்பவர்; அவர் கழிவறை என நினைத்து தவறுதலாக விமானி அறைக்கதவை திறக்க முயன்றார்’ என்றார். விமானத்தில் அத்துமீறி நடந்துகொண்ட அந்த பயணிக்கு, இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் காலம் வரை விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
