×

டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட சீமானுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே சமீபத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமாருக்கு எதிராக, சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

மேலும், மனுவிற்கு சீமான் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கை அடுத்த மாதம் 15ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags : Seeman ,DIG ,Varunkumar ,Madras High Court ,Chennai ,Naam Tamil Party ,IPS ,Varunkumar… ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...