×

தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.45.21 கோடி செலவில் 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

சென்னை: தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.45.21 கோடி செலவில் 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2030ம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உருவாக வேண்டும் என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்கேற்ப, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் அவர்களது திறனை மேம்படுத்த 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் 50,000 தொழிலாளர்கள் பயன் பெற ஏதுவாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் ரூ.45.21 கோடி செலவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியின்போது ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு கூலி ரூ.800 வீதம் பயிற்சி காலத்திற்கு ரூ.5600 வழங்கப்படும். இப்பயிற்சியின் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலன் பேணுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-2Aல் உதவியாளர் நிலை பதவிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு பணி நியமன ஆணையையும் அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீரராகவ ராவ், ஆணையர் ராமன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணுசந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Labor Department ,Minister ,C.V. Ganesan ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...