×

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று இந்தியா அபார வெற்றி

 

துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று முன்தினம் நடந்த முதல் சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து, நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக பாகிஸ்தானின் சாகிப்ஸதா ஃபர்கான், ஃபகார் ஜமான் களமிறங்கினர். 3வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா பந்தை அடித்த ஃபகார் (15 ரன்), விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த சயீம் அயூப், வழக்கம் போல் சொதப்பலாக ஆடி, 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அடுத்து வந்த ஹுசேன் தலத், 10 ரன்னில், குல்தீப் யாதவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்திருந்த மற்றொரு துவக்க வீரர் ஃபர்கான் (58 ரன்), சிவம் தூபே பந்தில் குல்தீப்பிடம் கேட்ச் தந்து அவுட்டானதால், பாக். அணி ஆட்டம் கண்டது. சிறிது நேரத்தில் முகம்மது நவாஸ் (21) ரன் அவுட்டானார். 20 ஓவர் முடிவில், பாகிஸ்தான், 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்திருந்தது. இந்திய தரப்பில் சிவம் தூபே 2, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியில் அதிக பட்சமாக அபிஷேக் சர்மா 74, கில் 47 ரன்களை எடுத்தனர்.

Tags : India ,Asian Cup Super 4 round ,Dubai ,Pakistan ,Asian Cup ,Bangladesh ,Sri Lanka ,Asian Cup T20 ,UAE ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!