- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய
- அமைச்சர்
- ஜிதேந்திர சிங்
- யூனியன் மாநிலத்தின் நிர்வாக நீதிமன்றம்
புதுடெல்லி: ஓய்வுபெற்ற நீதிபதிகள், நிர்வாகத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளின் தலைவர் பதவிகளை ஏற்கத் தயக்கம் காட்டுவதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஒன்றிய அரசின் நிர்வாகத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளின் தலைவர் பதவிகளை ஏற்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தயங்குகின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தரமற்ற வீடுகள், வாகனங்கள், முறையான அலுவலக வசதிகள் இல்லாதது, எழுதுபொருட்கள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அவர்கள் அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை இருப்பது, உரிய மரியாதை அளிக்கப்படாதது போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.
தீர்ப்பாயங்களுக்கு உரிய வசதிகளை வழங்க முடியாவிட்டால், அவற்றை மூடிவிட்டு, வழக்குகளை உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றிவிடுங்கள் எனவும் உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒன்றிய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் அகில இந்திய மாநாட்டில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தயக்கத்தை ஒப்புக்கொள்கிறேன். பொதுவாகவே ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஒன்றிய அரசின் நிர்வாகத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளின் தலைவர் பதவிகளை ஏற்கத் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் தயக்கத்தினால்தான், நீதித்துறை உறுப்பினர் இல்லாத சூழலில் நிர்வாக உறுப்பினர் தீர்ப்பாய அமர்வுகளுக்குத் தலைமை வகிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க, மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்தல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
