சென்னை: தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனை மரத்தினை வெட்டுவதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதி அவசியம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் தட்சிணாமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட, வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைத்தல் மற்றும் பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல் மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் தக்க அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், வருவாய் கோட்ட அலுவலர், சார் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு தலைவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஒருங்கிணைப்பு அலுவலர், தோட்டக்கலை இணை இயக்குனர் செயல் உறுப்பினர், வேளாண்மை இணை இயக்குநர், கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் மாவட்ட அளவிலான அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதேபோன்று வட்டார அளவிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில மரமாக திகழும் பனை மரத்தினை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம். பனை மரம் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பனை மரம் வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். ஒரு பனை மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 பனை மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அல்லது வட்டார அளவிலான குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பனை மரத்தினை வெட்ட ஒரு மாதத்திற்குள் விண்ணப்பதாரர்களுக்கு ெதரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
