×

கமுதி அருகே கோயில் திருவிழாவில் சாக்கு ஆடை அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி: கமுதி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் சாக்கு ஆடை அணிந்துகொண்டு ஊர்வலமாக வந்து விநோத முறையில் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் ஸ்ரீஅழகு வள்ளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆவணி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்றது. கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

விழாவில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்க்குடம், கரும்பாலை தொட்டில், ஆயிரம் கண் பானை எடுத்து வந்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். முன்னதாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்டோர் உடல் ஆரோக்கியம் வேண்டி, தங்களது உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஆடி, பாடியபடி ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் தங்களது உடல் முழுவதும் வைக்கோலால் சுற்றிக்கொண்டு, அதன்மீது சாக்கு ஆடை அணிந்து கையில் கம்புடன் ஊர்வலமாக வந்து விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கண்மாயில் முளைப்பாரிகளை கரைத்தனர்.

Tags : Kamudi ,Sri Azhaku Valliamman Temple ,Chengapada village ,Ramanathapuram district ,Aavani Pongal festival… ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு