×

நாட்றம்பள்ளி அருகே குழந்தைகளுக்கு வாங்கிய குர்குரே பாக்கெட்டில் செத்துப்போன எலி

ஜோலார்பேட்டை: நாட்றம்பள்ளி அருகே குழந்தைகள் சாப்பிட வாங்கிச்சென்ற குர்குரே பாக்கெட்டில் எலி செத்து துர்நாற்றம் வீசியது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது குடும்பத்தினர் அருகே உள்ள டீக்கடையில் தங்களது குழந்தைகளுக்கு 4 பாக்கெட் ‘குர்குரே’ வாங்கி சென்றுள்ளனர்.

அப்போது 3 பாக்கெட்டுகளில் இருந்த குர்குரேவை குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். 4வது பாக்கெட் சாப்பிடுவதற்காக ஒரு சிறுவன், பிரித்தபோது அதில் எலி இறந்து கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் குர்குரே வாங்கிய கடைக்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர். பின்னர், ‘நாங்களும் வெளியில்தான் வாங்குகிறோம். எங்களுக்கு ஒன்றும் தெரியாது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் இதைப்பற்றி கூறுகிறோம்’ என்று கூறி சமாளித்து அனுப்பி உள்ளனர்.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த குடும்பத்தினர், எலி இறந்து கிடந்தது குறித்து வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், சம்பந்தப்பட்ட கம்பெனி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இதுபோன்று இனி வருங்காலங்களில் குழந்தைகள் சாப்பிடும் பொருளை அஜாக்கிரதையாக பாக்கெட் செய்யக்கூடாது எனவும் அதில் கூறியுள்ளனர்.

Tags : Natramballa ,Jolarpet ,Cellapandi ,Mallakunda village ,Tirupathur district ,Natrampalli ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...