மொரதாபாத்: உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அசாம் கான். இவர் கடந்த 2008ம் ஆண்டு சாஜ்லெட் காவல்நிலையம் அருகே தன் ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் சில மின்கம்பங்கள், கடைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக அசாம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அசாம்கான் சீதாபூர் சிறையில் அசாம் கான் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு சிறப்பு எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அசாம் கானை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 17 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பின் அசாம் கான் நேற்று வௌியே வந்தார். இதுகுறித்து அசாம் கானின் வழக்கறிஞர் ஷாநவாஸ் சிப்டைன் நக்வி கூறுகையில், “அசாம் கானுக்கு ஆதரவாக எங்கள் தரப்பு ஏழு சாட்சிகளை ஆஜர்படுத்தியது. எதிர்தரப்பு வழக்கறிஞர் ஒருவரை மட்டுமே ஆஜர்படுத்தினார். இது அசாம் கானின் விடுதலைக்கு வழிவகுத்தது” என்றார்.
