புதுடெல்லி: அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேச கூட்டுறவு வங்கியில் இருந்து வழங்கப்படும் கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. கடந்த ஜூன் மாதம் சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கூட்டுறவு வங்கியின் ஊழியர்கள் உள்ளிட்டோரை சிஐடி போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் எம்பி குல்தீப் ராய் சர்மா கைது செய்யப்பட்டார். இந்த வங்கியில் கடன் வழங்கப்பட்டதில் ரூ.200 கோடி அளவிலான பெரிய நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. நிதி முறைகேட்டில் ஈடுபடுவதற்காக போலியாக 15 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
வங்கியின் துணை தலைவராக இருந்த குல்தீப் சர்மாவுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே, அந்தமான் கூட்டுறவு வங்கியின் நிதி முறைகேடுகளை சட்ட விரோத பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், குல்தீப் ராய் சர்மா, கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் கே.முருகன்,கடன் பிரிவு அதிகாரி கே.கலைவாணன் ஆகியோரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.அவர்களை 8 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
