புதுடெல்லி: பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை சேவை தினமாக பாஜ கட்சியினர் நாடு முழுவதும் ரத்த தான முகாம், மருத்துவ முகாம்கள் நடத்தி நேற்று கொண்டாடினர். ஜனாதிபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். குஜராத்தின் வத் நகரில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த பிரதமர் மோடி நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினர். பிரதமர் மோடியின் பிறந்தநாளை நாடு முழுவதும் ‘சேவா பக்வாடா’ என்ற பெயரில் சேவை தினமாக கொண்டாடி பாஜ ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, பாஜ ஆளும் மாநிலங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் கடமை பாதையில் நடந்த ரத்ததான முகாமில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ரத்ததானம் செய்தனர். மேலும் அமைச்சர்கள் பலரும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பிரதமர் மோடி பிறந்த வத் நகரிலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உபி மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் பாஜவினர் பழங்கள், உணவுகள் வழங்கினர். அகில பாரதிய தேரபந்த் யுவக் பரிஷத் எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக சாதனை முயற்சியாக இந்தியாவில் 7,000 இடங்களிலும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளிலும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
மேலும், பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடிக்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், ‘‘ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இன்று நாட்டில் சிறந்த இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான கலாச்சாரத்தை நிர்ணயித்தவர் பிரதமர் மோடி. உங்கள் வழிகாட்டுதலில் உலக சமூகமும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது’’ என்றார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து செய்தியில், தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு சீராக முன்னேறி வருவதாகவும், உலக அரங்கில் இந்தியா முத்திரையைப் பதித்து வருவதாகவும் வாழ்த்தி உள்ளார்.
இதே போல, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், மூத்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மக்களின் நல்வாழ்விற்காக 50 ஆண்டாக ஓயாமல் உழைத்துக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி என அமித்ஷா புகழாரம் சூட்டி உள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை வரும் அக்டோபர் 2ம் தேதி வரை 15 நாட்களுக்கு கொண்டாட பாஜ சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* டிரம்ப், புடின் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இது குறித்து டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார். ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவரது ஆதரவுக்கு நன்றி’’ என கூறி உள்ளார். இதே போல, ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி உள்ளிட்டோர் வாழ்த்து கூறி உள்ளனர்.
