×

ஐரோப்பிய ஆணைய பிரதிநிதி கருத்து இந்தியா-ரஷ்யா உறவு தடையாக இருக்கிறது

பிரஸ்ஸல்ஸ்: இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ரஷ்யாவுடன் இந்தியா காட்டும் நெருக்கம் தடையாக இருப்பதாக ஐரோப்பிய ஆணைய உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50% இறக்குமதி வரியை தொடர்ந்து, இந்தியா தனது வர்த்தகத்தை பன்முகப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ள இந்தியா, இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் பிரஸ்ஸல்சில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. உக்ரைன் போரால் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு தடைகள் விதிக்கும் நிலையில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதோடு, போர் பயிற்சிகளில் ஈடுபடுவது கவலை அளிக்கிறது. இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வெறும் வர்த்தகத்தை மட்டுமே சார்ந்ததல்ல, அது விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை பாதுகாப்பது பற்றியதும் கூட’’ என கூறி உள்ளார். ஆனாலும், இந்தியா உடனான உறவை இரட்டிப்பாக்குவதற்கான நேரம் இது என ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லியான் தனது சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : European Commission ,India ,Russia ,Brussels ,High Representative ,Gaja Gallas ,European Union ,US ,President ,Trump ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...